ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, தந்தை பெரியாரின் சாதனைகள் குறித்த துண்டறிக்கையை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பொதுமக்களிடம் விநியோகித்தபோது, நாம் தமிழர் கட்சியினர் அதனை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்பட்டது. இதில் தபெதிகவினர் 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், தபெதிகவினரை தாக்கிய நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உட்பட 4 பேர் மீது ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதற்காக BNS- 296-b, 115/2, 351/2 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாதக வேட்பாளர் சீதா லட்சுமி உட்பட 51 பேர் மீது போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள சிஎஸ்ஐ பிரப் தேவாலயத்தில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் அக்கட்சியினர் துண்டறிக்கைகளை வழங்கி பிரசாரம் செய்தனர். வழிபாட்டு தளங்களுக்குள் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட அக்கட்சியினர் 51 பேர் மீது 3 பிரிவுகளில் ஈரோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தேர்தல் விதிமீறல், அதிகாரியை பணி்செய்ய விடாமல் தடுத்தல், பிரச்சனை உண்டாக்கும் வகையில் செயல்படுதல் ஆகியவற்றுக்காக BNS-174, 191/2, 132 ஆகிய பிரிவுகளில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.