கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி
வேலூர் அருகே குடிபோதையில் மனைவியின் தாலியை பறித்து வந்த சைக்கோ ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் வெட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த ஊசூரில் அணைக்கட்டு சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை இன்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் மரம் வெட்டும் கோடாரியால் அடித்து உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த அரியூர் போலீசார் ஏடிஎம் இயந்திரத்தை கோடாரியால் வெட்டி உடைத்து சேதப்படுத்திய நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தை மரம் வெட்டும் கோடரியால் அடித்து உடைத்து சேதப்படுத்திய நபர் குடிபோதையால் மனநலம் பாதிக்கப்பட்ட ஊசூரை சேர்ந்த கந்தசாமி (53) என்பதும் தெரியவந்தது. கந்தசாமி வேலைக்கு ஏதும் செல்லாமல் குடிபோதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கந்தசாமி தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு மற்றும் அவரது தாலியைப் பறித்து வந்துள்ளார். மனைவியிடம் இருந்து படித்து வந்த தாலியை அப்பகுதியில் உள்ளவர்களிடம் கொடுத்து பணம் கேட்டுள்ளார். இவர் ஏற்கனவே குடிபோதையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை தெரிந்து அப்போது மக்கள் யாரும் அவருக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை.
இதனால் மனைவியிடமிருந்து பறித்து வந்த ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க அணைக்கட்டு சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் முயற்சி செய்துள்ளார். அப்பொழுது ஏடிஎம்மிலும் பணம் வராததால் ஆத்திரமடைந்த கந்தசாமி விறகு வெட்டும் கோடரி எடுத்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும்.இதில் ஏடிஎம் இயந்திரம் முழுவதும் சேதமடைந்துள்ளதகவும் போலீசார் தெரிவித்தனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனைவியின் தாலியை பறித்து வந்த சைக்கோ நபர் விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அணைக்கட்டு சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.