முதுமலையில் யானை தாக்கி பாகன் பலி
நீலகிரி அடுத்த முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் பாலன் உயிரிழந்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கும்கி, சவாரிக்கு பயன்படுத்தப்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள், குட்டி யானைகள் உள்ளிட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் ஒரு பாகன் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் உயிரிழந்தார். யானைக்கு உணவு அளித்துவிட்டு அழைத்துச் சென்றபோது திடீரென தாக்கியதில் பாலன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பாகன் பாலன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார். பாகனை கொன்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு மசினி யானை கொண்டுவரப்பட்டது.
முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.