Homeசெய்திகள்தமிழ்நாடுபிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - மாணவர் இயக்கங்களின்...

பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுத்து “இந்தி” படித்தால் தான்  தருவோம் என்று ஆணவத்துடன் “பிளாக் மெயில்” செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்புமாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ( Federation of Students Organisation – Tamil Nadu)  தமிழ்நாடு அறிவிப்பு!

தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய கல்விக்கான நிதியைத் தருவோம் என பா.ஜ.க.வின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் ஆணவத்தோடு பேசி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியை திணிக்க முயலும் சூழ்ச்சிக்கு எதிராக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) சார்பாக கடந்த 25.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆங்காங்கே தன்னெழுச்சியாக இந்தி எழுத்துக்களை அழித்து எழுச்சிமிகு போராட்டங்களை தொடங்கி இருக்கின்றனர்.

மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் இதை திசை திருப்பும் விதமாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்கள். இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  “ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு நடத்திய கண்டனப் பேரணி என்பது, சென்னை சௌகார்பேட்டை இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன் 1938-ஆம் ஆண்டு ஆண்களும் பெண்களுமாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இன்றைய பதிப்பு போல இருந்தது” என்று மாணவர் போராட்டத்திற்கு ஊக்கமளித்துள்ளார். மேலும் “ரூ.5000 கோடியல்ல 10,000 கோடி கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்! அதில் கையெழுத்துப் போட மாட்டோம்!” என்று தமிழர் உரிமைப் போர்க்களத்தில் எழுச்சியுடன் முழங்கி இருக்கிறார்.

வடஇந்திய மாநிலங்களில் பேசப்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட அந்த மக்களின் தாய்மொழிகளைக் கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தி எனும் ஆதிக்க மொழிப் படையெடுப்பு சிதைத்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்குள் மும்மொழிக் கொள்கை என்ற முகமூடி அணிந்து நுழைய முயற்சிக்கிறது. மேலும் இந்தியின் வழியே சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழர்களின் பண்பாட்டைச் சிதைக்கும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது. இதை உணர்ந்துதான் நம் உயிரிலும், உணர்விலும் கலந்துள்ள தாய்த்தமிழ் மொழி காக்கும் போர்க்களத்தில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) தொடர் போராட்டங்களைத் தமிழ்நாடு முழுவதிலும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாளை (28.02.2025) தமிழ்நாடு வருகை தருவதாக இருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த எமது கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்த நிலையில், தர்மேந்திர பிரதானின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் உணர்வெழுச்சிக்கும், மாணவர்களின் போராட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும்.

எனினும், அய்.அய்.டியில் நடைபெறும் விழாவில் ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் கலந்துகொள்வதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதான் என்ற ஒருவரை மட்டும் கண்டிப்பதல்ல, தமிழ்நாட்டுக்கு நிதி தர மறுத்து, ஹிந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்க முனையும் ஒன்றிய அரசைக் கண்டித்தே இந்தப் போராட்டம் என்பதால், ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர்  திரு.சுகந்த மஜூம்தாருக்கும் கருப்புக் கொடி காட்டுவது என்று மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு முடிவெடுத்துள்ளது.

தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், சமூகநீதி மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், திராவிட மாணவர் கழகம், திராவிட மாணவர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் நீதி மய்யம், மதிமுக மாணவர் அணி,மாணவர் இந்தியா, முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்துள்ள “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO-TN)” சார்பில், சென்னை, ஐ.ஐ.டி. வாயிலில் “மாபெரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நாளை (28.02.2025) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே, கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் இயக்கங்களைச் சார்ந்த அனைத்து பொறுப்பாளர்களும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்த்த அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளான மாணவர்களுடன் பங்கேற்று, ‘உயிரைக் கொடுத்தேனும் தாய்த்தமிழைக் காத்த கொள்கைத் தீரர்களின் வழி வந்தவர்கள் நாம்’ என்பதை பாசிச பா.ஜ.க. அரசிற்கு உணர்த்துவோம்!

MUST READ