கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ள சாராயத்தை விற்பனை செய்த கருக்கந்தாங்கல் அமாவாசை, விளம்பூர் விஜயகுமார், பனையூர் ராஜேஷ், ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்துரு உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த சித்தாமூர் போலீசார் செய்யூர் நீதிமன்ற ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து 135 லிட்டர் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில் விஜயகுமார் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவராவார். கைதாவதற்கு முந்தய நாள் அதாவது கடந்த 14 ஆம் தேதி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விஜயகுமார் நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை மாவட்ட தலைவர் மோகனராஜா வெளியிட்டார்.