மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு 1சி அரசு பேருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு வந்தது. பேருந்து நடராஜபுரத்தை அடுத்த மல்லியக்கொல்லை என்ற இடத்தை கடக்கும்போது, பேருந்தின் எதிரில் சண்டையிட்டு வந்த நாய்கள் மீது பைக் மோதாமல் தடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது பேருந்து மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பி உள்ளார்.
அப்போது பேருந்து எதிரே இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் சுஜிதா, ஸ்வேதா, ஹரிணி, மகாலட்சுமி, கல்லூரி மாணவிகள் கௌசிகா, சங்கரி உள்ளிட்ட 10 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் இரண்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டியின் உயிரை காப்பாற்ற அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியதால் மரத்தில் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்