காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை”- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
இது தொடர்பாக, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் கருகியும், ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைச்சல் குறைந்தும் உழவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சம்பா மற்றும் தாளடி பருவ சாகுபடிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் காவிரி பாசன மாவட்டங்களில் நில உரிமையாளர்கள் மட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி 51 அடி, அதாவது 18. 25 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு தண்ணீர் தேவை. ஆனால், மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு காவிரி பாசன மாவட்டங்களுக்கு 4 நாட்களுக்குக் கூட தண்ணீர் திறக்க முடியாது. கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. வடகிழக்கு பருவ மழை நடப்பாண்டில் இயல்பான அளவில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு வடகிழக்கு பருவமழை மட்டுமே போதாது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை களமிறக்கிய காங்கிரஸ்!
குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் தோல்வியடைந்து விட்டதால், செய்த முதலீட்டையெல்லாம் இழந்து கடனாளி ஆகிவிட்ட உழவர்கள், மீண்டும் ஒரு முறை இழப்பை சந்திக்க தயாராக இல்லை என்பதால், சம்பா மற்றும் குறுவை சாகுபடியை தொடங்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் குறைந்தது 15 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். சம்பா நடவு செப்டம்பர் மாதத்திலும், தாளடி நடவு அக்டோபர் மாதத்திலும் தொடங்கி நவம்பர் மாதத்தில் நிறைவடைய வேண்டும். ஆனால், இதுவரை ஒட்டுமொத்தமாக 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கூட சம்பா மற்றும் தாளடி நடவு செய்யப்படவில்லை.
நவம்பர் மாதத்தையும் கணக்கில் கொண்டால் கூட அதிகபட்சமாக 4 லட்சம் ஏக்கரில் சம்பா- தாளடி செய்யப்படலாம். மீதமுள்ள 11 லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களின் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் உழவர்கள் பெரும் வருவாய் இழப்பை சந்திப்பார்கள். அதேபோல், காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள வேளாண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழப்பார்கள்.
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!
காவிரி பாசன மாவட்டங்கள் இன்று எதிர்கொள்ளும் அவல நிலைக்கு கர்நாடகத்திடமிருந்து உரிய தண்ணீரை பெறாதது தான் காரணமாகும். அதனால், காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஏக்கருக்கு ரூபாய் 25,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூபாய் 25,000 இழப்பீடு வழங்குவதுடன், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.