சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை என குற்றம் சாட்டிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை போக்குவரத்து துறை நிராகரித்த்தது. இதனையடுத்து, இது தொடர்பாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது.
இந்த நிலையில், போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.