மகளிர் உரிமைத் திட்டம்- நாளை முதல் தெருவாரியாக டோக்கன்: ராதாகிருஷ்ணன்
சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களின் வீடு தேடி வரும், பொதுமக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என சென்னை மாநகராட்சி ஆணையரும் திட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன், விண்ணப்பம் மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர், மாவட்ட ஆட்சியர் அருணா உட்பட ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பிக்க முகாம்கள் இரண்டு கட்டமாக சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான, டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் நாளை முதல் தெரு வாரியாக பொதுமக்களின் வீடு தேடி வழங்கப்படவுள்ளது. காவல்துறை, உணவு பொருட்கள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்போடு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபட்டுள்ளது.
முகாம்கள் நடைபெறவுள்ள இடம் மற்றும் தேதி நியாய விலைக் கடைகளில் ஒட்டப்படும். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதிக்கு பொதுமக்கள் முகாமுக்கு வந்தால் போதும், தேவையற்ற பதற்றம் அவசியமில்லை என அறிவுறுத்தினார். மேலும், சென்னையில் 98 வார்டுக்கு முதல் கட்ட முகாமில், 102 வார்டுக்கு இரண்டாம் கட்ட முகாமிலும் விண்ணப்பங்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு முகாம்களிலே வங்கி கணக்கு ஏற்படுத்தி தரப்படும்.
பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.