திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானங்களை வரவேற்கிறோம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அதைச் செய்ய வேண்டும்; எவ்விதத்திலும் தமிழ்நாடு அதில் பாதிக்கப்படக்கூடாது என்று ஒரு தீர்மானமும்; ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக முறையையே மாற்றி அமைத்து அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த இரண்டு தீர்மானங்களும் கடந்த ஜனவரி 26 ஆம் நாள் திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முக்கியமான பிரச்சனைகள் குறித்துத் தமிழ்நாடு அரசின் கொள்கை நிலைப்பாடாகத் தனித் தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த உயர்நிலைக் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
2. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை ( MSP ) உத்தரவாதப்படுத்தும் சட்டத்தை இயற்ற வேண்டும்; எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்; விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்; 2022 இல் நடைபெற்ற போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். அவர்கள்மீது மிக மூர்க்கமான தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்தத் தாக்குதலை இந்த உயர்நிலைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்ததுபோல அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு முன்வர வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.
3. எஸ்சி, எஸ்டி துணைத் திட்டத்துக்கான சட்டத்தை வரவேற்கிறோம், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் பட்டியல் சமூகத்தினர் துணைத்திட்டம் (எஸ்சிஎஸ்பி), பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கான (டிஎஸ்பி) சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டப் பேரவையிலும், பொது வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அந்த சட்டத்தைப் பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றவிருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை இந்த உயர்நிலைக்குழு வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
4. பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், பின்னடைவு காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்ட நிரப்பப்படும் என்று திமுக ஆட்சி அமைந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. சில துறைகளில் அவ்வாறு நிரப்பப்பட்டது. உயர்கல்வித்துறை உள்ளிட்ட சில துறைகளில் இன்னும் ஆயிரக்கணக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே அவற்றையும் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
5. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும், பதவி உயர்வில் 200 பாய்ண்ட் ரோஸ்டர் முறை ரத்து செய்யப்பட்டு டிஎன்பிஎஸ்சி தரவரிசை கடைபிடிக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக எஸ்சி பிரிவினருக்கும் உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 16 (4A) மாநில அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்னாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் அத்தகைய சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் அவ்வாறு சட்டம் இயற்ற வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.
6. அனைத்திந்திய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு, ஒன்றிய பாஜக அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியதையும்; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதையும், மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும்; விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த சட்டம் இயற்ற வலியுறுத்தியும்- பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணியும் பங்கேற்கிறது. இந்த வேலை நிறுத்தம் வெற்றியடைய இந்த உயர்நிலைக் குழு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.