டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு பிரதமர் அலுவலகம் சென்றடைந்தார். அப்போது தம்மை சந்திக்க வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடி பூக்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பிரதமரின் வரவேற்வை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ‘தடம்’ பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். இந்த பெட்டகத்தில் திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட், விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு, நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால், பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
சரியாக காலை 11.45 மணிக்கு தொடங்கிய இருவரின் சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அந்த மனுவில் முக்கியமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டதின் இரண்டாம் கட்டப் பணிகள் என்பது தொடங்கியுள்ள நிலையில், அந்த திட்டம் என்பது ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நடக்கிறது. எனவே அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து விரைந்து விடுவிக்க வேண்டும் என வலியறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டிற்கான சமக்ர -சிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 3வதாக இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி உபகரங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் பிரச்சினைக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றுள்ளன.