தமிழ்நாட்டில் மீண்டும் போர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக போர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலிடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நேற்று அமெரிக்காவின் ஜாபில் நிறுவனம் 2000 கோடி மதிப்பில் திருச்சியில் தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் சிகாகோவில் போர்டு நிறுவன அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில் தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன அதிகாரிகளுடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடைபெற்றதாக கூறினார். 30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை மறைமலை நகரில் நடைபெற்று வந்த கார் உற்பத்தியை கடந்த 2022ஆம் ஆண்டுடன் போர்டு நிறுவனம் நிறுத்திவிட்டது.இந்த நிலையில், போர்டு நிறுவனத்தை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.