தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் வென்ற 190 வீரர் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை அழைத்து விரைவில் மிகப்பெரிய பாராட்டு விழா நடைப்பெற உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். விளையாட்டுப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உள் ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்வதற்கான அறிவிப்பு வரும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
234 தொகுதிகளிலும் மினி இன்டோர் ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விளையாட்டு துறையில் இந்தியாவின் தலைநகராக சென்னையை மாற்றுவோம் என அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மே 7ஆம் தேதி முதலமைச்சர் பொறுப்பேற்றது நாள் முதல் விளையாட்டுத்துறைக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாகவும், 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில் 380 வீரர்களை முதல்வர் வாழ்த்து அனுப்பினார் என்றும், அதில் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து 75 பதக்கங்களை பெற்றுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 190 விளையாட்டு வீரர்களுக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாயை முதல்வர் வழங்குவதாக கூறிய அவர், 40 கோடியே 85 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் நலனிலும் முதல்வர் அக்கறை கொண்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை அழைத்து மிகப்பெரிய பாராட்டு விழா விரைவில் நடைப்பெற உள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், 4.85 கோடி ரூபாய்க்கான ஊக்கத் தொகையினை முதலமைச்சர் வழங்கினார். இந்த வெற்றி கூட்டு முயற்சியின் காரணமாக அமைந்ததாகவும், இந்த வெற்றி தொடர பணியாற்றி வருகிறோம். 234 தொகுதியிலும் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
தமிழகத்தில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைப்பட்டு, சென்னை அல்லது சென்னைக்கு அருகில் விளையாட்டு தலைநகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சர்வதேச தரத்திலான போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சி பகுதிகளில் விளையாட்டு கட்டமைப்பினை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களை உறுவாக்கி, விளையாட்டு துறையின் தலைநகராக மாற்ற வேண்டும் என்பது அரசின் இலக்காக உள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், விளையாட்டுத்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி துணைத்தலைவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கவுதம் சிகாமணி மற்றும் உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.