குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் கடந்த 2009 ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக ஒன்றிய அரச அறிவித்துள்ளது.
தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மறு தேர்வில் மீண்டும் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்களை வெளியேற்றப்படாது. மேலும் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஒன்றிய அரச அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி என்பது மாநிலங்களிடம் உள்ளது என்பதால், இதில் இறுதி முடிவை மாநில அரசு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி கொள்கை முற்றிலும் தவறானது. இதனால் இளம் சிறார்கள் மனம் பெரிதும் பாதிக்கப்படும். உங்கள் கல்வியே வேண்டாம் என்று மாணவர்கள் இடையில் நிற்பதற்கு வழிவகுக்கும்.இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது “கட்டாய பாஸ் என்பது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே கற்றுக்கொண்டுதானே வளர்ந்து வந்திருக்கிறது. திடீரென்று ஒரு குழந்தையால் எவ்வாறு கற்க முடியாமல் போகிறது. முறையாக கற்றுக்கொடுப்பதற்கான ஆசிரியர்கள் இருந்தார்களா, கற்றுக்கொள்வதற்கான சரிசமமான வாய்ப்புகள் இருந்துள்ளதா என்கிற எதையுமே ஆராயாமல் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.
அடிப்படை சிக்கல்கள் பலவும் ஆராயப்படாமலே இருக்கையில் மாணவர்கள் ஃபெயில் ஆக்குவது என்பது சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், குறிப்பாக பெண்கள் பள்ளி படிப்பைக் கைவிடுவதைத்தான் அதிகரிக்கும். கற்றல் குறைபாடுகளைக் கண்டறியாமல் குழந்தைகளின் மீது பழிபோட்டு ஃபெயில் செய்வது என்பது கல்வி மறுப்புதான். கல்வியைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், குழந்தை எவ்வாறு கற்கிறது, குழந்தை கற்பதற்கான வாய்ப்புகள் சரியாக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா என்பதைக்கூட அறியாமல் எடுக்கப்பட்ட முடிவு இது. இதற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறது என்றால் சரியான புரிதல் இல்லாமல்தான் செய்திருக்கின்றனர்” என்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறை ரத்து சட்டம் தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது என்று உடனடியாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி முறை தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.