
சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான பகுதிகளில் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் வீட்டு உபயோகப் பொருட்கள் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் என பழுதாகி இயல்புநிலை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே காவல்துறையினரும் மீட்பு படையினரும் இணைந்து மக்களுக்கு உதவி வருகின்றனர். இதற்கிடையே வடபழனியில் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக்கொண்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத மழையிலும் பிரசவ வலியில் துடித்த அப்பெண்ணை கோயம்பேடு போலீசார் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நல்லபடியாக குழந்தை பிறந்துள்ளது. அதையடுத்து தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தன்னலமற்ற காவலர்களின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆங்காங்கே பல இடங்களில் மீட்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியும் மருத்துவ உதவிகள் வழங்கியும் வருகின்றனர். இன்று இரவுக்கு பின்னர் மழையின் தாக்கம் குறையும் என்றும் படிப்படியாக நிலைமை சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.