படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜீலை 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். சென்னை அயனாபுரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தினார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.