Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

-

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் கேப்டடன் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் 9.30 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அவரது மறைவு செய்தி அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அன்பிற்கினிய நண்பர் – தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்.

தமிழுணர்வும் தாராள மனமும் கொண்ட உன்னத மனிதரான நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் கலைத்துறையில் இணைந்து செயல்பட்ட காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன. விஜயகாந்த் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளார்.

MUST READ