தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இலக்கியவாதியும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன்(93) வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். முன்னதாக குடியாத்தம் காக்கா தோப்பில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை மோசமானாதால், கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் நேற்று இரவு காலமானார்.
மறைந்த குமரி அனந்தன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார். அத்துடன் 5 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். ‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட குமரி அனந்தனுக்கு கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
இதனையடுத்து மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி அனந்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தந்தையின் உடலைப்பார்த்து கதறி அழுத தமிழிசை சௌந்தரராஜனுக்கு , ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.