பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் இன்று ஒரு நாள் பங்கேற்க தடை விதித்தார்.
இந்த நிலையில், பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், மக்களவை தேர்தலில் 40/40 வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது. அதைத் திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்னைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 20ம் தேதி ஒரு மணி நேரத்துக்கு மேலாக விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு உரிய பதிலை நானும் அளித்தேன். அன்றைய தினம் அதிமுகவினர் கலந்துகொண்டு தங்களது கருத்தை பதிவு செய்திருக்க வேண்டும். திட்டமிட்டு அவையை புறக்கணிப்பு செய்கின்றனர் அதிமுக உறுப்பினர்கள் என கூறினார்.