மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் சல்பாஸை தண்ணீரில் கலந்து குடித்ததில் சுயநினைவின்றி சரிந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த 48 மணி நேரத்திற்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர். பின்னர், அண்ணன் வைகோ அவர்களுடன் இணைந்து பயணப்பட்டார். ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது. அவரது பிரிவால் வாடும் ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்..