உடலுறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்ன தானம், ரத்த தானம் , உடலுறுப்பு தானம் என ஒவ்வொரு தானமும் முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறப்பு வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இதில் மற்ற இரண்டு தானங்களையும் மக்கள் அதிகளவு செய்து வருகின்றனர். ஆனால் உடலுறுப்பு தானம் செய்ய பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இறந்த பின்னர் ஒருவர் உடலுறுப்பு தானம் செய்வதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற முடியும். பொதுவாக கண், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், எலும்பு மஜ்ஜ்சை, ரத்த நாளங்கள் போன்றவற்றை தானமாக வழங்கலாம். அப்படி உடலுறுப்பு தானம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மேலும் உடலுறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023