கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு மதுஅருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆக. 23 முதல் ஆக. 25 வரையிலான கடந்த தினங்களில் மதுஅருந்தி விட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல்துறையில மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட்ட 52 நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுபானக்கூடங்களுக்கு சொந்த வாகனங்களில் வருபவர்கள் திரும்ப செல்லும்போது மது அருந்திய சூழ்நிலையில் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மது அருந்திய ஒருவருக்கு சொந்த டிரைவர் இல்லாத நிலையில், மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் அல்லது மதுபானக் கூடத்தின் ஏற்பாட்டில் ஓட்டுநர் ஒருவர் மது அருந்திய நபரை அவரது வீட்டில் விட வேண்டும் என்றும், நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநரை மதுபானக் கூடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்தவருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதுபானக்கூடங்களின் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் கோரும் பொழுது அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும் என்றும் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது,.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.