அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆய்வகத்தில் கணினி வெடித்து விபத்திற்குள்ளான நிலையில், மூச்சு திணறல் காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் இன்று காலை திடீரென கணினி வெடித்து விபத்திற்குள்ளானது. ஆய்வகத்தில் இருந்து கரும்புகை வெளியேறி, அருகே இருந்த அறைகளுக்கும் பரவியதால் அங்கிருந்த 23 மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழக்கப்பட்டு மாணவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்வம் குறித்து அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரத்தினசாமி, தேளூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.