நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளதாகவும், அதனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்களில் நடிகர் விஷால் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- நாளை நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு செல்லவில்லை, விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆடம்பரமாக ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. விஜய் அரசியல் கட்சிக்கு வருகிறார். மக்களுக்கு நல்லது செய்வார் என்ற ஒரு எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. விஜயகாந்த்க்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு விஜய் கிட்ட இருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கும் ஒரு அரசியல்வாதியாக வருகிறார்.
நான் உட்பட மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார், என்ன விஷயங்களை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட்டு அரசியலுக்கு வரப்போகிறார் என்பது மிகப்பெரிய ஒரு முடிவு. அது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நபர் அந்த கோடிகளெல்லாம் வேண்டாம் என்று மக்கள் சேவைக்காக போகிறேன் என்று வருகிறார். அதை வரவேற்க வேண்டிய விஷயம், அவரை மனந்தாரா வாழ்த்துகிறேன்.
அவர் நல்லது செய்ய வேண்டும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய்க்கு வாழ்த்துக்கள். முதல் அடியை எடுத்து வைக்கிறார். திடீரென்று கோவில் கோயிலாக செல்லவில்லை. தொடர்ச்சியாக பல கோயிலுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன். நண்பர்கள் மூலமாக எனக்கு கோயில்கள் பற்றி தெரியவந்தது. அதனால் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறேன். விஜய்க்கு எல்லா கடவுள் அருளும் உண்டு. கர்த்தராக இருந்தாலும் சரி, அல்லாவாக இருந்தாலும் சரி, பார்வதி அம்மனாக இருந்தாலும் சரி சிவனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவருக்கு அந்த ஆசீர்வாதம் உண்டு.
நடிகர் சங்க கட்டிடம் முதலில் வரட்டும். அதுதான் நாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடைசி வாக்குறுதி, 3500 நாடக நடிகர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துவிட்டது என்ற செய்தியை காதில் கேட்கும்பொழுது என்னுடைய அரசியல் பிரவேசம், என்னுடைய திருமணம் பற்றி பேசுகிறேன். என் கல்யாணத்திற்கு உங்களை அழைக்கிறேன், இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.