திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து அறிக்கை செயலின் மறுவடிவமாம் முதலமைச்சருக்குத் தாய்க் கழகம் வாழ்த்து!
‘‘திராவிட மாடல்” அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு (1.3.2025) பிறந்த நாளில், தாய்க் கழகத்தின் சார்பில் மனங்கனிந்த குளிர்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரின் நிர்வாகத் திறன் எத்தனை நேர்த்தியானது என்பதை, இவர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதே நாடே கண்டு வியந்திருக்கிறது. சென்னை மாநகரில் திசைதோறும் துலங்கும் மேம்பாலங்கள் எல்லாம் அவர் புகழ் பேசும்!
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஜப்பான் வரை நேரில் சென்று, ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்திக் காட்டிய சிற்பி!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, தந்தை பெரியாரின் லட்சியத்தை வென்று காட்டிய லட்சிய வீரர்!
புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை (மாதம் 1000 ரூபாய்), மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் (விடியல் பயணம்), நான் முதல்வன் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (இங்கிலாந்து அரசே பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளது), கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்கள்மூலம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு முதல் நிலை மாநிலமாக ஒளிவீசுகிறது!
ஒன்றிய அரசின் பொருளாதாரத் தடைகளுக்கிடையே நாளும் நாளும் சாதனைகள் என்பதெல்லாம் அசாதாரணமானவை!
நலப் பணிகள்மூலம் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, ஏதோ ஒரு வகையில் பால் வார்க்கிறது – மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். ‘‘இது நமது ஆட்சி” என்ற உரிமையோடு கொண்டாடும் மனப்பான்மை மக்களிடம் நிலவுகிறது.
சமூகநீதி, பெண்ணுரிமை, மாநில உரிமை, மொழி உரிமை, சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்கிற திராவிட சித்தாந்தத்தில் வீரநடை போடும் – தமிழ்நாட்டை, இந்தியத் துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கும் வகையில் நல்லாட்சி நாயகராக மிளிர்கிறார் நமது ஒப்பற்ற முதலமைச்சர்!
‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்பதில் கவனமாக, வலிமையாகக் காய் நகர்த்தி வருகிறார்.
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ‘‘தமிழ்நாடு மேற்கு அய்ரோப்பிய நாடுகளோடு போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது” என்று கூறியதையும் இணைத்துப் பாராட்டுகிறோம்.
ஜனநாயகம், சமூகநீதி, மதச் சார்பின்மைக்கு விரோதமாக ஒவ்வொரு அடியையும் வேக வேகமாக எடுத்து வைக்கிற ஒன்றிய அரசை எதிர்த்து நிற்கும் திராணியும், வலிமையும் பொருந்திய தலைவராக இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல – இந்தியத் துணைக் கண்டத்திற்கே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நமது ஒப்பற்ற முதலமைச்சரை தாய்க் கழகம் கொள்கைப் பாசத்தோடு, அன்போடு அரவணைத்து உச்சிமோந்து வாழ்த்துகிறது.
உடல்நலத்துடன் நீடு வாழ்ந்து, நாட்டுக்கு நற்றொண்டு ஆற்றிட வாழ்த்துகிறோம்! வாழ்த்துகிறோம்!!