Homeசெய்திகள்தமிழ்நாடுதெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து... நடிகை கஸ்தூரியை கைதுசெய்ய அகில இந்திய தெலுகு சம்மேளனம் வலியுறுத்தல்

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… நடிகை கஸ்தூரியை கைதுசெய்ய அகில இந்திய தெலுகு சம்மேளனம் வலியுறுத்தல்

-

தெலுங்கு பெண்களை குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய தெலுகு சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார்,  நேற்று பிரமிணர்கள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் நடிகை
கஸ்தூரி பேசுகையில் தெலுங்கு சமுதாய பெண்களைப் பற்றி மிகவும் இழிவாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார். தெலுங்கு சமுதாய பெண்கள் அனைவரும் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு அந்தப்புற வேலை செய்ய வந்தவர்கள் என்றும் அவர்கள் தமிழர்கள் என்று கூறுவதாக கஸ்துாரி கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் வார்த்தைகள் வன்மம் கக்கும் விதமாகவும், மேலும் தமிழர்கள், தெலுங்கர்கள் இடையே பிரிவினைவாதம் ஏற்படுத்தும் விதமாக ஒரு கொச்சையான வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இதை கேட்டதிலிருந்து தெலுங்கு சமுதாய மக்கள் கொந்தளிக்கின்றார்கள். எங்களுக்கு விவரம் தெரிந்த காலம்தொட்டு எங்களுடைய தாய், தந்தை மற்றும் எங்களது பாட்டனார்கள் பல நூற்றாண்டு காலமாக இவ்வூரில் வசித்து வருகிறோம். ஆனால் தற்பொழுது மேற்சொன்ன நடிகை கஸ்தூரியின் கருத்துக்களால் எங்களுக்கு ஒருவித பாதுகாப்பு இன்மை போல் உணர்கிறோம். எங்களுக்குள்ளே ஒருவித அச்சம் ஏற்பட்டு, எங்களால் தமிழ் பேசும் நபர்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. தினந்தோறும், எங்கள் வீட்டருகில் வசிக்கும் தமிழர்களை கூட எங்களால் பார்க்க முடியவில்லை.

இவை அனைத்தையும் பேசிவிட்டு தற்போது மன்னிப்பு கேட்ட கஸ்தூரியை நாங்கள் அவரது மன்னிப்பை ஏற்கப்போவதில்லை. தெலுங்கு பெண்களைக் குறித்து இவ்வளவு இழிவாக பேசிய அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் மன்னிப்பு கூற வேண்டுமென்றால், அவர் நீதிமன்றம் சென்று முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் இரண்டரை கோடி தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாலும் நீரும் போல் ஒன்றாக கலந்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்க மொழி பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியவருக்கு காவல்துறை அவரை கைதுசெய்து தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ