கர்நாடக பெண்ணை திருமணம் கொண்டதால் சர்ச்சையில் சிக்கிய சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள், மடத்தின் நிர்வாக பொறுப்புகளை இந்துசமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு மடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவில் கிராமத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் உள்ளது. இந்த மடத்திற்கு என 9 கோவில்கள் உள்ளன. இதனை கடந்த 2 ஆண்டுகளாக இம்மடத்தின் ஆதீனமாக உள்ள மகாலிங்க தம்பிரான் சுவாமிகள் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், 57 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த ஹேமஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மடாதிபதியை கண்டித்து திருவிடைமருதூர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த நிலையில், சூரியனார் கோவில் மடத்தின் ஸ்ரீகாரியம் எனும் கட்டளை தம்பிரான் சாமியான சுவாமிநாத சுவாமியை மடத்தின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ஆதீனம் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள், வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் இரவு சூரியனார் கோவில் ஆதீனத்தில் இருந்து, ஆதினம் மகாலிங்க தம்பிரான் சுவாமி அப்பகுதி மக்களால் வெளியேற்றப்பட்டார். இதனால் அவர் அருகில் உள்ள சூரியனார் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். உடனடியாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் டிஎஸ்பி-க்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் ஆதீனத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திருமண விவகாரத்தால் பதற்றம் அதிகரித்த நிலையில் தங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என திருவாடுதுறை ஆதீன நிர்வாகிகள், சூரியனார் கோவில் ஆதீனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மகாலிங்க தம்பிரான் சுவாமிகள் தனது பொறுப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் தான் ஒப்படைப்பேன் என உறுதியாக தெரிவித்தார். அதன்படி, திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை கதிராமங்கல சரக ஆய்வாளர் அருணாவிடம், மடம் தொடர்பான அனைத்து சாவிகளையும் ஆதினம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சூரியனார் கோவில் பகுதியில் இருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூரியனார் கோவில் ஆதீனம், மகாலிங்க தம்புரன் சுவாமிகள், தான் இன்னமும் சூரியனார் கோவில் ஆதீனமாக நீடிப்பதாகவும், தமது நிர்வாக பொறுப்புகளை மட்டும் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மடம் தொடர்பான பிரச்சனைகள் முடியும் வரை தமிழகத்தில் தான் இருப்பேன் என்றும், கர்நாடகா செல்ல மாட்டேன் என்றும் மகாலிங்க தம்புரன் சுவாமிகள் தெரிவித்தார். தனது திருமணத்திற்கும், தற்போது எழுந்துள்ள பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஆதீனம் விளக்கம் அளித்தார்.