2000 ரூபாய் நோட்டு மாற்றம்- வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு
ரூ.2000 நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில், பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகளை மக்களுக்கு செய்து கொடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வங்கிகள் செய்து தர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. தினமும் எத்தனை 2000 ரூபாய் தாள்கள் மாற்றப்படுகிறது என்று ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கான நடவடிக்கை தொடரும் நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 4 மாத கால அவகாசம் உள்ளது.