கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திலகர் நகரை சேர்ந்தவர்கள் ராஜாமணி – நீலா தம்பதியினர். ராஜா மணி ஸ்டேஷனரி பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். நீலா கல்லூரி ஒன்றில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை நீலா தனது வீட்டின் பின்புறமுள்ள தகர ஷெட்டில் உடைகளை காய வைக்க சென்றிருந்தார். அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது.
நீலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கணவர் ராஜா மணி, அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் வடசேரி போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.