நடிகை சித்ரா மரண வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாகவும், 2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், மேலும் வழக்கில் சாட்சிகளாக உள்ள நபர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலேயே இருப்பதால், வழக்கை திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அவ்வாறு மாற்றப்படும் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.