ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள்
கே.கனகராஜ், ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பின்பு முதல் முறையாக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்தார். மேலும், ஈரோடு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.