சிவகாசி பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று பூத்தோட்டி எனப்படும் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்தில் ஏற்பட்டது. இதில் முதற்கட்டமாக ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர். அத்துடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகிலுள்ள பட்டாசு ஆலைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும், யாரும் விபத்து பகுதிக்கு செல்லாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி மேலும் யாராவது உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.