Homeசெய்திகள்தமிழ்நாடு10 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி அதிரடி கைது

10 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி அதிரடி கைது

-

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற பொன் முத்துராமலிங்கம் (45) என்பவர் பழக்கமானார். சக்திவேல் நிலம் வாங்க நினைத்துள்ளார். இதையறிந்த முத்துராமலிங்கம் அவரிடம் தனக்கு தெரிந்த ஒருவரின் நிலம் ஏலகிரி மலையில் உள்ளது. அதை பார்த்து வாங்கிக்கொள் என்று தெரிவித்துள்ளார். அதை நம்பிய சக்திவேல் கடந்த 2014-ம் ஆண்டு தனது காரில் ஏலகிரி சென்றார். அவருடன் முத்துராமலிங்கம் மற்றும் இவரின் நண்பரான கொடுங்கையூரை சேர்ந்த கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் (42) ஆகியோர் சென்றுள்ளார். அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினர்.

இதையடுத்து மறுநாள் காலையில் சக்திவேலை முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிலத்தை காண்பிப்பதாக காரில் அழைத்துச் சென்றனர்.சிறிது நேரத்தில் நிலத்தை காட்டாமல் சக்திவேலிடம் இருவரும் பணம் கொடுக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் பணத்தை தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் கழுத்தை அறுத்துள்ளார்.

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
File Photo

இதனால் பயந்த அவர் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து காரில் வந்த முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் காருடன் தப்பிச்சென்றனர். காயமடைந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் சக்திவேல் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இருவரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முத்துராமலிங்கத்தை சி பி சி ஐ டி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கோபாலகிருஷ்ணனை போலீசார் தேடி வந்தநிலையில் அவரை கைது செய்ய ஐ.ஜி.அன்பு உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு வினோத்சாந்தாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு சஜிதர் ஆகியோர் வழிகாட்டுதல்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கோபால கிருஷ்ணன் சென்னை கொடுங்கையூரில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

 

MUST READ