கல்குவாரி உரிமையாளர்களை திமுக பழிவாங்கி வருகிறது- சி.வி.சண்முகம்
விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் கனிமளவளத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், “கனிம வளத்தை நம்பி தமிழகத்தில் பல துறைகள் உள்ளன. கல்குவாரி வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் குவாரி உரிமையாளர்களை இந்த அரசு மிரட்டிவருகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு மானியங்களை வழங்கிவருகிறது. தண்ணீர், தொழிற்சாலை அமைய இடம் உள்ளிட்டவற்றை மானியமாக வழங்கிவருகிறது. ஆனால் குவாரிகளை அமைக்க தமிழக அரசு எந்த மானியத்தையும் வழங்கவில்லை. கல்குவாரி உரிமையாளர்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது.
வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்பதால் அதிமுக ஆட்சியில் குவாரி தொடர்பான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குவாரி உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். யாருடைய ஆதாயத்திற்கு தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குவாரிகளில் ஆய்வு என்ற பெயரில் மூடி வருகின்றனர். தொழில் செய்யமுடியாத அளவுக்கு கடுமையான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருகின்றன. திமுக அரசின் நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குவாரி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் புதிதாக எந்த வேலைவாய்ப்பும் உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை கூட நிரப்பவில்லை. இப்படியான சூழலில் தமிழக வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றும் கணிம வளத்துறை, லாரித் தொழிலாளர்கள் உட்பட பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக இத்தொழில் தமிழகம் முழுவதும் முடங்கியுள்ளது. சட்ட விரோத கல்குவாரிகளையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் கணிம வளங்களையும் தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதை தடுப்பதற்கு பதில், கணிம வள தொழில் செய்யும் சிறிய மற்றும் நடுத்தர கணிமவள தொழிலதிபர்களை தன் அதிகாரத்தை வைத்து மிரட்டி வருகிறது. அச்சுறுத்தி வருகிறது. ஏதோ ஒரு ஆதாயத்திற்காக சிறிய, நடுத்தர கல் குவாரிகளை திமுக அரசு பழிவாங்குகிறது. யாருக்கோ ஆதாயம் ஏற்படுத்த, திமுக அரசு இவ்வாறாக நடந்து வருகிறது” என்றார்.