கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை ஏராளமானோர் குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 225 பேர் விஷச்சாராயம் குடித்து மருத்துவமனைகளை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷச்சாராயம் குடித்த பலரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 58 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று (ஜூன் 26) காலை கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62) மற்றும் ஏசுதாஸ் என்ற இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 74 நபர்கள் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும், தொடர்ந்து 88 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு.. (apcnewstamil.com)
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் ஏற்கனவே 62 பேர் உயிரிழந்து இருந்த நிலையில் தற்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதான சரத் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாகவும் இதன் மூலம் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.