டெல்லி மாநிலத்தில் அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (ஜூன் 01) மாலை 05.00 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்குமாறும், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறும் கோரியுள்ளார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி மாநில முதலமைச்சருடன் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானும் தமிழக முதலமைச்சரைச் சந்தித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மானுக்கு பொன்னாடை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது, நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெல்லி கல்வி அமைச்சர் அடிஷி மர்லினா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, சஞ்சய் சிங், ராகவ் செதா ஆகியோர் உடனிருந்தனர்.
பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டத் தலைவர்களைச் சந்தித்து ஏற்கனவே ஆதரவு கோரியுள்ளார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.