Homeசெய்திகள்தமிழ்நாடுஅச்சுறுத்தும் டெங்கு பாதிப்பு : மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு பாதிப்பு..

அச்சுறுத்தும் டெங்கு பாதிப்பு : மதுரையில் ஒரே நாளில் 13 பேருக்கு பாதிப்பு..

-

கொசு - டெங்கு
மதுரையில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கண்காணிப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மழை காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகள், காலி இடங்களில் தண்ணீர் தேங்குவதால் , டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பாதிப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றன.

இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரேநாளில் புதிதாக 13 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த(கடந்த) ஒரு மாதத்தில் மட்டும் அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் மதுரையில் நேற்று ஒரே நாளில் 67 பேர் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காய்ச்சல் அதிகரித்து வருவதால் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்றும் , டெங்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 59 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சலால் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ