கனமழையின் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் த.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. கனமழையால் சென்னையில் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த ஏரிகளின் நிலை குறித்து இன்று ஆய்வு செய்துள்ளேன்.
அதில் பூண்டி ஏரியில் 99.16 அளவு நீர் நிரப்பி உள்ளது.கொசஸ்தலை ஆற்றில் 80 ஆயிரம் கன அடி வரை ஒரே நேரத்தில் நீரை வெளியேற்றலாம் ஆனில் தற்போது 16,500 கன அடி நீர்மட்டமே வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி
96 சதவீதம் நிரம்பியுள்ளது. இதில் 32 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். ஆனால் தற்போது 4,600 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. 90 சதவீதம் புழல் ஏரி நிரம்பி உள்ளது.
இதில் 7200 கன அடி நீர் வெளியேற்றலாம். தற்போது 790 அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேற்றம் குறித்து தொடர்ச்சியாக முன் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்கள் அரசு தரப்பில் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.