Homeசெய்திகள்தமிழ்நாடு“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய 'TN ALERT' செயலி..

“ஹலோ.. நான் உதயநிதி பேசுறேங்க..” பருவமழை பாதிப்புகளை அறிய ‘TN ALERT’ செயலி..

-

Image

வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டி சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த அவசர கால செயல்பாட்டு மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொண்டு புகாரளித்த பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ வானிலை மையம் எச்சரிக்கை படி தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 20 செ.மீ மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. எங்களைப் பொறுத்தவரை பொதுமக்களின் உயிரும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

Image

> பொதுமக்களுக்கு பிரத்யேக உதவி எண்ணாக 1913 வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்

> இதற்கான கட்டுப்பாட்டு அறையில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அவசர அவசரமாக தொலைபேசி மூலம் வழங்கி வருகின்றனர்.

> சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப், நம்ம சென்னை போன்றவற்றிலும் மழை பற்றிய தவகல்கள் உடனுக்குடன் வழங்கப்படும்.

> பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்

> வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசுடன் சேர்ந்து செயல்பட 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

> தண்ணீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்றுவதற்காக 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

> தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ள 31 தாழ்வான ரயில்வே சப்வேக்கள் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

> சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு அதிகாரிகளுடன் இணைந்து வழங்குவர்.

> 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

> அரசு சார்பில் ‘TamilNadu Alert’ என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.

> பல்வேறு வானிலை மாதிரிகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து வருகிறோம்.

> தற்போது ஓரிரு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறாமல் இருந்தால் அவற்றை சுற்றி வேலிகள் அமைக்கப்படும்.

> அப்படி ஏதேனும் பகுதிகளில் மூடாமல் இருப்பது பொதுமக்களின் கவனத்திற்கு வந்தால், உடனடியாக சமூக வலைதளங்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.

> தரையின் மீது கிடக்கின்ற அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வாக இருந்த மின்மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

> மற்ற மாவட்டங்களில் இருந்தும் மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

> அரசு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ” என கேட்டுக்கொண்டார்.

MUST READ