மண்டபம் – பாம்பன் பாலம் வரையிலான தண்டவாளம் அகற்றம்
மண்டபத்தில் இருந்து பாம்பன் செல்லக்கூடிய நூற்றாண்டு பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் பழைய வழித்தடத்தில் ரயில் சேவை முடிவுக்கு வருகிறது.
ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பது பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்கு வகித்தது. பாம்பன் ரயில் சேவை 1914 ஆம் ஆண்டு தொடங்கி நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில் பாலத்தில் சோதனை நடத்திய ரயில்வே நிர்வாகம் ரயில் போக்குவரத்தை நிறுத்துவது என முடிவெடுத்தது.
இதை எடுத்து ராமேஸ்வரத்திலிருந்து செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
இருப்பினும் ரயில் பாலத்தை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலம் வரையில் உள்ள தண்டவாளங்களை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதனால் நூற்றாண்டு கடந்த பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் புதிய பாலம் கட்டும் பணிகளும் மும்முறமாக நடைபெற்று வருகின்றன.