மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உராய்ந்து, தீப்பொறி பரவிய சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் இருந்து 186 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று பகல் 1.47 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது. ஓடு பாதையில் விமானம் ஓடிக் கொண்டிருந்த பொழுது விமானத்தின் பின் பக்கத்தின் வால் பகுதி, ஓடுபாதை தரையில் உராய்ந்து தீப்பொறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக அதனுடைய இடத்தில் நிறுத்தினார். இதன் காரணமாக விமானத்தில் இருந்த 186 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 194 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அந்த விமானம், விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது. அந்த விமானத்திற்கு பதிலாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4.50 மணிக்கு, 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே, விமானத்தின் வால் பகுதி சேதமடைந்த விவகாரம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மறைக்கப்பட்ட நிலையில், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம், இந்த தகவல் டெல்லியில் உள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று பிற்பகலில் இன்டிகோ விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. மேலும் பாதிப்பு ஏற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை முழுமையாக சீரமைத்து, தகுதிச்சான்றிதழ் பெற்ற பின்னரே விமானத்தை மீண்டும் பயணிகள் சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில், விமானத்தில் இருந்த 186 பயணிகளிடமும் டிஜிசிஏ வருத்தம் தெரிவித்துள்ளது.
மேலும் இண்டிகோ விமானம் விபத்து இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தி, தவறு எதனால் ஏற்பட்டது? என்ற முழு அறிக்கையையும், உடனடியாக டெல்லியில் உள்ள டிஜிசிஏ தலைமை அலுவலகத்திடம் ஒப்படைக்கும் படி சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.