உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபு
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டதால், தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் இரண்டு நாளாக தீவிர வேட்டை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்து, 19,028 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த நபர்கள் குடித்த சாராயத்தை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்திய போது, இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல எனவும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷசாராயம் என்பதும் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த விஷசாராயம் பாண்டிச்சேரியிலிருந்து கள்ளத்தனமாக வாங்கி விற்பனை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழலில், தொழிற்சாலையிலிருந்து விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளதால் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார். எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷசாராயம் வாங்கப்பட்டது எனவும் அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.