காருக்குள் 7வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தானா – போலிசார் விசாரணை
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் மெக்கானிக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது.

கொலை செய்து காருக்குள் வைத்து விட்டனரா? அல்லது காருக்குள் சென்ற சிறுவன், காரை திறக்க முடியாததால் மூச்சுத் திணறி உயிரிழந்தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகர் அம்மாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமரகிரி பைபாஸ் ரோட்டில் ரஷ்யா காலனி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு மாணிக்கம் என்பவர் கார் மெக்கானிக் பட்டறை நடத்தி வருகிறார். பழுது பார்க்க வரும் கார்கள் பட்டறையின் முன்பாக கம்பி வேலி போடப்பட்ட வெட்டவெளியில் நிறுத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் மாணிக்கம் தனது சகோதரியின் திருமணத்திற்காக கடந்த 22 ஆம் தேதி அன்று கார் மெக்கானிக் பட்டறையை மூடிவிட்டு சென்றுள்ளார். சகோதரியின் திருமணம் முடிந்த நிலையில் நேற்று மாலை கார் மெக்கானிக் பட்டறையை மாணிக்கம் திறந்துள்ளார். அப்போது அந்தப் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்து காரை திறந்து பார்த்துள்ளார்.
காருக்குள் சிறுவன் ஒருவனின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மாணிக்கம் இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சம்பந்தப்பட்ட கார் நான்கு மாதத்திற்கு முன்பு இந்த பட்டறைக்கு டிங்கரிங் வேலைக்காக கொண்டுவரப்பட்டது என்றும், அதில் சிறுவன் இறந்து நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இறந்து போன சிறுவன் யார்? என விசாரணை மேற்கொண்டனர். மேலும் காரில் இருந்த சடலத்தை மீட்டு மருத்துவர்களைக் கொண்டு அதே இடத்தில் உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் அதேப் பகுதியை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளியான சுகன்யா என்பவரின் மகன் சிலம்பரசன் என்பது தெரியவந்தது.
மேலும் சுகன்யாவின் முதல் கணவன் கண்ணன் என்பவர் அவரை விட்டு பிரிந்து சென்று இரண்டு வருடங்கள் ஆகிறது என்றும் அதற்கடுத்து கட்டிட தொழிலாளியான வினோத் என்பவருடன் சுகன்யா வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. சுகன்யாவுக்கும், கண்ணனுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. அதில் இரண்டு பெண் குழந்தைகளை கண்ணன் தன்னுடன் அழைத்துச் சென்ற நிலையில் சிறுவன் சிலம்பரசன் மட்டும் தாயுடன் இருந்து வந்தார். சிறுவன் சிலம்பரசனுக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டையே சுற்றி வந்துள்ளான் .

இந்த நிலையில் சுகன்யா தனது இரண்டாவது கணவன் வினோத்துடன் இருந்து வந்துள்ளதால் மகன் சிலம்பரசனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரமாக சிறுவன் சிலம்பரசன் காணவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சுகன்யா, தனது மகன் காணவில்லை என எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. மேலும் அக்கம், பக்கத்தினர் விசாரித்த போது தனது மகன் சென்னையில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிறுவனின் உடல் வீட்டிற்கு அருகே உள்ள பட்டறையில் காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகன்யா மற்றும் வினோத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. சிறுவன் அறியாத்தனமாக காருக்குள் சென்ற போது காரின் கதவு லாக் ஆகி இருக்கலாம் என்றும் கதவை திறக்க முடியாமல் சிறுவன் மூச்சு திணறி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மற்றொருபுறம் தங்கள் கள்ளக்காதலுக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக கருதி தாய் சுகன்யாவும், கள்ளக்காதலன் வினோத்தும் சேர்ந்து சிறுவனை கொலை செய்திருக்கலாம் என்ற வகையிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காருக்குள் ஏழு வயது சிறுவனின் சடலம் அழுகிய நிலையில் இருந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.