Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை : நடத்துநர்களுக்கு பரிசு அறிவிப்பு..

அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை : நடத்துநர்களுக்கு பரிசு அறிவிப்பு..

-

UPI - Digital transaction
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்தின் நடத்துநர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.

பயணம் என்றாலே பெரும்பாலான மக்கள் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேருந்தில் ஏறினாலே நடத்துனருக்கும், மக்களுக்கும் இருக்கும் பிரச்சனை சில்லறை இல்லை என்பது தான். இதனால் சில நேரங்களில் வாக்குவாதம் , கைகலப்பு கூட நடப்பதுண்டு. அதேபோல் சில்லறை இல்லை என்பதற்காக பாதி வழியில் பயணிகளை இறக்கிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. அதிலும் அண்மைக்காலமாக எங்கும், எதிலும் டிஜிட்டல் என்றாகிவிட்டது. சிறிய பெட்டிக் கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை வந்துவிட்டது. ஆகையால் மக்களும் கைகளில் பணம் வைத்திருப்பது குறைந்துவிட்டது. அதிலும் சரியான அளவில் சில்லறை வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வது இயலாத காரியம்.

ஆகையால் பேருந்துகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வர வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படியே தமிழக அரசும், அரசு விரைவுப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை கொண்டு வந்துள்ளது. தற்போது இதனை ஊக்குவிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சிறப்பு பேருந்து

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “அரசு விரைவுப் பேருந்துகளில் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூ ஆர் குறியீடு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாதமும் இம்முறையில் அதிகபட்சமாக மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

MUST READ