திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தலைமை ஆசிரியரை பிரிய மனமின்றி பள்ளி மாணவர்கள் கதறி அழுத சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு மோகன்தாஸ் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக சேர்ந்துள்ளார். இவர் பள்ளியில் சேர்ந்த நேரத்தில் பள்ளியில் 52 மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனையடுத்து சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பெற்றோர்களிடம் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியின் சலுகைகள் பற்றி எடுத்துக் கூறி தற்பொழுது 103 மாணவர்கள் ஆக உயர்த்தியுள்ளார். பள்ளி ஆண்டு விழாவை தனியார் பள்ளிக்கு இணையாக நடத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகையும் வழங்கி உள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 3-ம் தேதி பணியிட மாற்றம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் பள்ளியிலிருந்து கிளம்பியுள்ளார். இதனை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களை தேற்றினார். அதன்பின்னர் மாணவர்கள் கைதட்டி உற்சாகமாக அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த காட்சியை அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.