மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்யவும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தகுதி மிக்க OBC, SC, ST பிரிவினரின் பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உயர் பதவிகளில் நேரடி நியமனங்கள் மேற்கொள்ளும் நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மத்திய அரசு பணிகளில் நியாயமான மற்றும் சமமான பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வருகிற ‘க்ரீமி லேயர்’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், அதற்கு முன்பு, பல
ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட – நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட இது கட்டாயமாகும் என்று கூறியுள்ளார்.