தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று 2,461 சிறப்பு பேருந்துகள் மூலம் 1.10 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் புறநகர் புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்த பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பேருந்துகள் உடன், கூடுதலாக 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் 1,10,745 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.