தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியது. இதுவரை 6,585 கடைகளுக்கு தடையில்லா சான்று அனுமதி. உரிய ஆவணங்கள் இல்லாத 681 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனைக்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். விபத்துகளை தவிர்ப்பதற்காக பட்டாசு கடைகளில் பின்பற்ற வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை தீயணைப்புத் துறையினர் நேரடியாக ஆய்வு செய்த பின்னரே தடையில்லா சான்றிதழ் வழங்கபடும் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகள் அமைக்க முன் வருவோர் தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.
அதன்படி இதுவரை தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. அதில், 2548 நிரந்தர கடைகளுக்கான சிறப்பு அனுமதி உட்பட 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன எனவும், போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 7,200 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் கள ஆய்வுக்கு பின்னர் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பட்டாசு, விற்பனை, சூடுபிடித்தது , 6585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
Diwali firecracker sales heat up – 6585 firecracker shops allowed |APC NEWS TAMIL