திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5/-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4/-ம் குறைக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வாக்குறுதி முக்கியமான வாக்குறுதி எனக் குறிப்பிடப்பட்டு முதலமைச்சரால் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
இதுபோன்ற வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகளையும் அரைகுறையாக, சம்பிரதாயத்திற்காக நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய்தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்கவேயில்லை. அதே சமயத்தில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது.
வாக்குறுதியை நிறைவேற்றாத இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றத் திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல் வரி விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசின் நிதித் துறை அதிகாரிகள் வணிக வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். ‘பால் விலையை குறைக்கிறோம்’ என்று சொல்லி, பால் மற்றும் பால் பொருட்களின் விலையை அதிகரித்ததோடு, குறிப்பிட்ட பால் மற்றும் பால் பொருட்களின் விநியோகத்தை குறைத்தது தி.மு.க. அரசு.
இதே பாணியில், டீசல் விலையை உயர்த்தி அனைத்துத் தரப்பு மக்களின் மீதும் கூடுதல் நிதிச் சுமையை சுமத்த தி.மு.க. அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரியை எதிர்க்கும் தி.மு.க. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று கோருகின்ற தி.மு.க. தற்போது தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்? தி.மு.க அரசின் இதுபோன்ற நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாக பாதிப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
திமுக அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வரி விதிப்பு தி.மு.க. ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும்.தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாடாளுமன்றம்; சட்டத்திருத்த மசோதாவை ஆக்ரோஷத்துடன் கிழித்தெறிந்த இளம் பெண் எம்.பி.