பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் .ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என T.T.V. தினகரன் தனது X பக்கத்தில் பதிவு
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வெட்டிப் படுகொலை – தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இது போன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.
எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன் என T.T.V. தினகரன் தனது X பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.